Wednesday, July 30, 2008

ஒரு சாலை ஒரு பெண் ஒரு விபத்து

வேளச்சேரியில் இருந்து நீலாங்கரை செல்ல வேண்டும்.

செருப்புக்குள் காலை நுழைத்து வெளிய வந்தேன்!

அட திருமலை "என்ன திருமலை எப்படி இருக்கீங்க?"
( திருமலை பக்கத்து வீட்டுகாரர் சம வயது தான் ஆனால் அண்ணா என்று தன் கூப்பிடுவார், என் முன் வழுக்கையால் அப்படியோ!)

" பஸ் ஸ்டாண்டுக்கு போறேன் "

"அப்படியா? வாங்க ட்ரோப் பண்றேன்! நான் கடைக்கு தான் போறேன்"

பைக் 100 அடி சாலையை அடைந்து வலது பக்கம் திரும்பி வேகம் பிடித்து! சாலையில் சிறிய கூட்டம்!

பைக் ஆட்டோமடிகாக வேகம் குறைந்தது! என்ன ?

"ஒரு அரிசி பை கிழிந்து கிடந்தது! சாலைஎல்லாம் அரிசி! ச்ச்கூடி ஒன்று சாலை ஓரமாக மல்லாந்து கிடந்தது! நிறைய கண்ணாடி உடைசல்கள்! கூட்டத்துக்குள் எட்டி பார்த்தேன்! ஒரு பெண், தலை எல்லாம் ரத்தம்! நீண்ட முடி ரத்தத்தில் நனைந்து ஒட்டிக்கொண்டு இருந்தது! திப்பி திப்பியாய்! யாரோ சோடா வங்கி வந்தார்கள்! தலையில் எங்கே அடி என்று தெரியவில்லை! தலை முழுவதும் தோள்கள் எல்லாம் ரத்தம், சுரிதார் அங்கங்கே கிழிந்து உள்ளே போட்டிருந்த பிரா தெரிந்தது! பெரிய விதத்தில் அசைவில்லை!

" தண்ணி குடுங்கப்பா"

யாரோ அவளை தூக்கி சாய்த்து முகத்தில் சோடா தெளித்தார்கள்! கைகள் லேசாய் அசைந்தது! உயிர் இருக்கிறது!

எந்த வாகனம் மோதி? சுற்றும் முற்றும் பார்த்தேன், உஹோம் எந்த வண்டியும் நிற்க வில்லை!

சாதாரனமாய் கேட்டேன் " எப்படிப்பா ?"

பக்கத்தில் இருந்தவர் " ஆட்டோகாரன் அடிச்சிடாம்பா! ஸ்பீடா பூடான்! பயந்துட்டான்னு நேநேகிறேன்"

நான் "ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போவல?"

"அட நீவேற! பாத்த இல்ல! தலைல அடிபட்டு இருக்கு தெர்றது கஷ்டம்! பூட்சின்னா? போலீசுக்காரன் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான்! இருக்கிற எல்லா வேலையும் விட்டுபுட்டு அலையனும்! ஆகறதா இதெல்லாம்!"

நான் "பூடுமோ"

அவளை உற்று பார்த்தேன்! எப்படியும் 25 வயது இருக்கும்! போட்டிருக்கும் டிரஸ், அலங்காரம் பார்த்தால் இந்து அல்ல! கிறிஸ்டியானோ முஸ்லிமோ? முஸ்லிமாக இருக்கலாம்! எனக்கு அப்படித்தான் தோன்றியது.

நான் திருமலை பார்த்தேன்!
அவர் புரியாமல் என்னை பார்த்தார், அது போகலாமா என்று கூட இருக்கலாம்! எனக்கும் குழப்பம்!

முஞ்சியில் சோடா அடித்த பின் அவள் மெதுவாய் கண் விழித்தாள், தலை திருப்பினாள், சட்டென்று ஒரு கையும் ஒரு காலும் உதைத்தாள்! தலையில் அடி பட்டு வலிப்பு வந்தால் ஆபத்து எங்கோ படித்து ஞாபகம் வந்தது! எதோ தவறு! தாமதித்தால் இவள் பிழைப்பது கஷ்டம்! உள் மனம் சொல்லியது!

நான் "என்னப்பா பாத்துகிட்டே இருக்கிங்க யாராவது ஆட்டோ கூபிடுங்க!"

எல்லோரும் நான் சொன்னதையே திருப்பி சொன்னார்களே தவிர யாரும் ஆட்டோவை மடக்க காணோம்!

நான் சட்டென்று சாலை நடுவில் வந்தேன்

"ஆட்டோ "

"கொஞ்சம் அர்ஜெண்ட் ஆஸ்பத்திரி போகணும்"

ஒரு ஆட்டோ திரும்பியது

"நவுருங்கப்பா! ஹலோ தூக்குங்கப்பா"

இரண்டுபேர் கால் பிடித்தார்கள்! கை பிடிக்க தயக்கம்! அது ரத்ததினாலா அல்லது பெண் என்பதாலா தெரியவில்லை

நான் உடனே இரண்டு கைகளை பிடித்து தூக்கினேன்! உஹும் முடியவில்லை சரிந்தாள்! சரி அவள் கைகளுக்கு இடையே அக்குளில் கை கொடுத்து தூக்கினேன்!

"யாராவது பொம்பளை இருந்தா கூபிடுங்கப்பா!" யாரோ ஒரு பெண் உதவினாள்!

நான் ஆட்டோவில் ஏறி அவளை உள்ளே வாங்கிக்கொண்டேன்! என் தோளில் சரித்து அசையாமல் பிடித்துக்கொண்டேன்!
"திருமலை நீங்க பைக் எடுத்துக்கொண்டு அதிபதி வந்துடுங்க! டிரைவர் அதிபதி ஆஸ்பிடல் போப்பா"

ஆட்டோ கிளம்பியது! யார் இவள் என் தோளில் சாய்ந்துகொண்டு? தெரியவில்லை

ரத்தம் வெளியேறி என் சட்டை காலர் ஷோல்டர் நனைத்து புதிதாய் என் மனைவி வங்கிதந்த ஜீன்ஸில் இறங்கியது, ஐயோ ஜீன்ஸ்.... ஆனால் அதற்குமேல் யோசிக்க முடியவில்லை!

இவள் பிழைப்பாளா ? கண் விழிப்பாளா?

இவளை பிணமாய் நினைக்க முடியவில்லை! இவள் அப்பா அம்மா இவளை பிணமாய் பார்த்தால்?
திருமணம் ஆகி இருக்குமோ? இவள் கணவன் இவளை பிணமாய் பார்த்தால் ?
எனக்கு நெஞ்சு அடைத்தது, லேசான நடுக்கம் பரவியது! அவளை இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்!

இல்லை இவள் பிழைப்பாள்! இப்போது வலிப்பு இல்லை!

"ஹலோ தமிழ் தெரியுமா?"

சும்மா கேட்டேன் கான்சியஸ் இருந்தால் பதில் சொல்லலாமே! திரும்ப திரும்ப கேட்டேன்! லேசாய் கண் விழித்தால்! ஹும் என்று முனகினால்!

இப்போது தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் கேட்டேன்.

"மேகருன்னிசா" என்ன மேகன்னிச? மேகசா புரியவில்லை!

ஆஸ்பிடல் வந்தது! டிரைவர் இடம் இருபத்து ரூபாய் கொடுத்தேன்

" எதுக்கு சார்?"

"வச்சிக்கோ பெட்ரோல் போடணும் இல்ல "

உள்ளே யார், யார்ரை கேட்பது?

நர்ஸ் வந்தால், "என்ன சார் ஆச்சு?"

நான் " தெரியலை ரோட்ல அடிபட்டு கீழ கேடந்தங்க! தூக்கிட்டு வந்தேன்! கொஞ்சம் செக் பண்ணுங்களேன் தலையில் அடி பட்டு இருக்கு! டாக்டர் இருக்கறா? "

நர்ஸ் "டுட்டி டாக்டர் இருக்கார், இப்படி படுக்க வையுங்க"

நானும் வார்டுபாயும் அவளை படுக்க வைத்தோம்! நர்ஸ் செக் பண்ணினாள், வலது காதுக்கு மேல் தலையில் எதோ குத்தி ஆழமாய் காயம்! ரத்தம் வெளியேறி கொண்டுஇருந்தது, என்னால் பார்க்க முடியவில்லை! கடவுளே காப்பாற்று! ஒன்றும் ஆக கூடாது, மற்றபடி அழமான காயம் இல்லை, ஆனால் கை கால் முதுகு என எல்லா இடமும் அடிபட்டு இருந்தது! நர்ஸ் முடியை கட் பண்ணி டின்ஜெர் வைத்து சுத்தம் செய்தாள்!

டுட்டி டாக்டர் வந்தார்

"சார் தலைல அடி பட்டிருக்கு! உடனே சிடி ஸ்கேன் எடுக்கணும்! ரெண்டு மூணு டெஸ்ட் எடுக்கன்னும்! அப்ப தன் பிரச்சினை இன்னான்னே தெரியும். இப்பதிக்கு கிளீன் பண்ணி ஒரு ஆண்டி ப்யோடிக் போட சொல்றேன்! பட் ஸ்கேன் எடுத்தா தான் எதுவுமே சொல்ல முடியும்"

"இப்ப நல்ல பாக்கறாங்க டாக்டர், எங்கிட்ட பேசினாங்க! ஒண்ணும் பயமில்லையே?" எனக்கு பயமாய் இருந்தது,

"தலைல அடி பட்டவங்கள பத்தி ஒண்ணுமே சொல்ல முடியாது சார், நல்ல பேசுவாங்க, சிரிப்பாங்க, ஆனா அடுத்த செகண்ட் என்ன வேணா நடக்கலாம்"

கடவுளே என்ன செய்வேன் உள்ள மனம் அரற்றியது.

"சரி டாக்டர் இந்த ஸ்கேன் டெஸ்ட் எல்லாம் எவ்வளவு ஆகும்? நான் வேணா பெ பண்றேன்" கிரிடிட் கார்டு இருக்கிறது
(பாங்கில் பணம் இருக்கா? அடுத்த மாதம் கட்ட முடியுமா? ஏதேதோ எண்ணங்கள் ஓடியது)

அவர் சிரித்தார்,

" உங்களுக்கு யாருன்னே தெரியாதுன்னு சொல்றிங்க! எதாவது ஆச்சின்னா? மொதல்ல இவுங்க வீட்ல இருந்து யாராவது வரத்து பெஸ்ட்! இல்லன்னா எல்லோரும் நம்மலதான் கேள்வி கேப்பாங்க"

"சரி டாக்டர், நான் ட்ரை பண்றேன் இன் கேஸ் லேட்டா ஆச்சுன்னா அதுக்குதான்?"

"ஒரு ஐயாயிரம் ஆகும் பட் வீட்டுல இருந்து யாராவது வரத்து பெஸ்ட், ட்ரை பண்ணுங்க, டிலே பண்ணாதிங்க"

திருமலை நுழைந்தார்,
"திருமலை இவுங்க வீட்ட கண்டு பிடிக்கணும்! என்ன பண்றது?"

அவள் எதோ பேசிக்கொண்டு இருந்தாள், உருது மற்றும் ஆங்கிலம். நான் ஆங்கிலத்தில் கேட்டேன் "உங்க வீடு எங்க ? அட்ரஸ் தெர்யுமா? "

அவள் யோசித்தாள்!

"தெரியல" "நான் எப்படி இங்க வந்தேன்?" அவள் குழப்பமாய் அதே கேள்வியை திரும்ப திரும்ப கேட்டாள்,

"என் பர்ஸ், மொபைல் எங்கே?"

ஹ கரெக்ட் அவள் பர்ஸ்? மொபைல்? ஆக்சிடென்ட் நடந்த இடத்தில் தான் இருக்கும்.
"திருமலை நீங்க உடனே பைக் எடுத்துட்டு போய் அவ பர்ஸ் மொபைல் கிடைக்குதா பாருங்களேன்" திருமலை தலை ஆட்டினார்
(ஏன் இவனுடன் வந்தோம் என்று நினைத்திருப்பாரோ? )

நான் அவளிடம் பேச்சு கொடுத்தேன், " வீட்டு நம்பர், போன் நம்பர் எதாவது ஞாபகம் இருக்கா, வீட்ல உங்க அப்பா இல்ல உங்க ஹச்பென்ட் யாராவது?"
அவள் யோசித்தாள் "அவர் தூங்குவர், நைட் ஷிபிட், போன் எடுக்க மாட்டார் "
"அப்படியா? வீட்டு லோகேசன் எதாவது, மெதுவா ஞாபக படுத்தி சொல்லுங்க"

"வேளச்சேரியில்"

"பக்கத்துல என்ன இருக்கும் கோயில் பர்மசி ?"

அவள் யோசித்தாள்.................................................................

"கழ்டம்" திருமலையாவது பர்சோடு வருவாரா?

"நம்பர் 17, 4த் கிராஸ்"

"என்ன ? 4th கிராஸ், ஓகே என்ன நகர், இல்ல லான்ட் மார்க் ?

ஹும் யோசித்தால்..................................................

............. " ரயில்வே பிரிட்ஜ் தாண்டி"

"தாண்டி?" எங்கே ?

யோசித்தாள்..........................................................................

திருமலை வந்தார், கூடவே ஒருவர், பக்கத்து கடைகரராம், பர்ஸ் போன் எல்லாம் எடுத்து வைத்திருந்தாராம், ஓகே பர்சுக்குள் எதாவது அட்ரஸ்?
அவளிடம் பர்சை கொடுத்தேன், தேடு எதாவது அட்ரஸ், பிரெண்ட்ஸ் அட்ரஸ் கொடு, அவள் தேடினாள், நான் அவள் போனில் தேடினேன், உஹும் எல்லாம் STD நம்பர்கள், ஒரு லோக்கல் நம்பர் கூட இல்லை, சரி ஒரு நம்பருக்கு அடிப்போம்! அடித்தேன் உருது,

"ஆங்கிலம் தெரியுமா?"

"க்க்யா?"

"இங்கிலீஷ் மாலும்?"

வேறு ஒருவர் பேசினார் "ஹலோ"

" சார் இந்த போன் சொந்தகாரங்களுக்கு ஆக்சிடென்ட்! டீடெயில் வேணும், ஹெல்ப் பண்ண முடியுமா?"
" என்ன என்ன இது மேகர் போன், அவளுக்கு என்னாச்சி?"
"ஒண்ணும் இல்ல லேசான காயம், பயப்பட ஒன்னும் இல்ல, அவள் வீட்டு அட்ரஸ் காண்டக்ட் நம்பர் தர முடியுமா?"

ஹச்பென்ட் ஷா நம்பர், அட்ரஸ் தேடினர், பேப்பரில் எழுதினேன்,

"சார் மறைகாதீங்க என் தங்கைக்கு என்ன ஆச்சி? " அவர் மறுமுனையில் அழுதார்!

எனக்கு ஏனோ தொண்டையை அடைத்தது "பயப்பட ஒண்ணும் இல்ல சார், நான் மீண்டும் தொடர்பு கொள்கிறேன்"

என் போனை எடுத்தேன், ரிங் போகிறது, பட் நோ ரேச்போண்ட்ஸ் (நைட் ஷிப்ட் ஞாபகம் வந்தது)

"திருமலை இதுதான் அந்த அட்ரஸ் ஹச்பென்ட் இருக்கார், சதர்லாந்துல வொர்க் பண்றார், பட் நைட் ஷிப்ட், தூங்கறான், நீங்க பைக் எடுத்துகிட்டு நேர போறீங்களா?"
" டைம் ஆவுது, டாக்டர் சொல்றது பயமா இருக்கு, திடீர்னு எதாவது ஆயிட்டா? "
"இன்னும் 20 நிமிடம் பார்ப்போம்! முடிஞ்சா கண்டு புடிங்க, இல்லன்னா எனக்கு கால் பண்ணுங்க, நான் ஸ்கேன் எடுத்டுறேன்" அவர் மவுனமாய் கிளம்பினர்!
நான் மற்ற நம்பர்களை தேடினேன்! இன்கம்மிங் கால்கள் வந்துகொண்டே இருந்தது, எல்லாம் STD, பதில் சொல்லி தீரவில்லை, யாரும் லோகலில் இருந்து கூப்பிடவில்லை, உள்ளே ஓடினேன்.

நர்ஸ் "சார் அவங்க பேர் இந்தா நோட்டில் என்ட்ரி போடுங்க அப்பதான் அட்மிசன் பண்ண முடியும், நர்சின் பேனா எடுத்தேன், அப்போதுதான் கவனித்தேன் என் கை எல்லாம் ரத்தம் காய்ந்தும் காயமலும் ஒட்டியது,

"உள்ள வாங்க சார்" நர்ஸ் குழாய் இடம் கூடிச் சென்றாள், கை கழுவினேன்,

என் ரீபோக் டி ஷர்ட் காட்டன், எனக்கு ரொம்ப பிடித்து அணிவது, முழுவதும் ரத்தம் கய்ந்துபோய் காதோரம், கழுத்தில் கழுவ சொன்னாள், கழுவினேன்.

போன் ஒலித்தது, திருமலை "சொல்லுங்க திருமலை" "அண்ணே துங்கிடு இருந்தார் கண்டுபிடிச்சிட்டேன், இன்னும் 10 நிமிடத்தில் அங்க இருப்போம்"

அப்பா எதோ ஒரு நிம்மதி பரவியது மனசில்.
அவளிடம் சொன்னேன், அவள் இன்னும் அதே குழப்பத்தில் " எப்படி நான் இங்கு வந்தேன், என்ன ஆச்சு?" என்று கேட்டுக்கொண்டு இருந்தாள்.

நான் வாசலுக்கு ஓடினேன், மாருதி சென், உள்ளே வெள்ளையாய் கொஞ்சமே அதிகமாய் தொப்பயாய் ஒருவர், பர்கிங்கில் காரை விட முயற்சித்தார் ஆனால் முடியவில்லை, பதற்றமாய் இருக்கும், ஒருவழியாய் காரை நிறுத்தி வெளியே வந்தார்.

"மிஸ்டர் ஷா ?"
" எஸ் "
" ஐ யாம் சுரேஷ் வாங்க, உங்களுக்காக தான் வைட்டிங்"

அவரிடம் நட்பான பார்வையோ பேச்சோ இல்லை, ஒருவேளை கோதுமை வெள்ளையாய், சென்ட் வாசனையாய் இருபவருக்கு, கருப்பாய் எண்ணை வடிய நிற்கும் என்னை பிடிக்க வில்லையோ? நான் அவரை தொடர்ந்து பின்னால் சென்றேன்

அவர் மனைவியிடம் சென்றார், எதோ பேசினார்கள்,

"அண்ணே கடைய தேரக்கணும் ரொம்ப லேட் ஆச்சு" திருமலை

" ஹோ சாரி திருமலை நீங்க கெளம்புங்க நான் ஜஸ்ட் ஹண்டோவேர் பண்ணிட்டு வரேன், என்னால ரொம்ப அலைச்சல் உங்களக்கு"

" அதெல்லாம் ஒண்ணும் இல்ல நா கடைய தேரக்கனும் அதான்" திருமலை கிளம்பினர்.

ஷா பர்சை எடுத்தான், பார்த்தான், " கொஞ்சம் பணம் மிஸ்ஸிங்"

நான் " எவளோ? "

பதிலில்லை

எனக்கு என்ன சொல்வது என்று தெரிய வில்லை, கிரிடிட் கார்டு எல்லாம் செக் செய்தான், திரும்பவும் எதோ பேசினார்கள்,
மொபிலை என் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தேன்,

"இவளுடைய ச்சூட்டி பைக்?"

நான் "அது ஆக்சிடென்ட் ஆனா எடதுலையே இருக்கும், போய் பார்த்துக்குங்க"

நான் இதுபோன்ற கேள்விகளுக்கு பழக்க படாததால் என்ன சொல்லுவதென்று தெரியவில்லை.

டாக்டரிடம் ஓடினேன்.

" டாக்டர் அவளோட ஹச்பென்ட் வந்தாச்சு, நீங்க பேசினால் பெட்டரா இருக்கும்"
அதற்குள் ஷாவே டாக்டர் ரூமுக்கு வந்துவிட்டார்
" சார் ஸ்கேன் எடுக்கணும் ஹெட் இஞ்சுரி ஆழமா இருக்கு, ரெண்டு மூணு டெஸ்ட் எடுக்கணும் கொஞ்சம் சீக்கிரம் செஞ்சா பெட்டர்",
"நர்ஸ் scanனுக்கு எழுதி கொடும்மா"

டாக்டரும் ஷாவும் பேசிக்கொண்டிருந்தார்கள்

"எக்ஸ்கியுஸ்மீ சார்" திரும்பி பார்த்தேன் நர்ஸ்

"சொல்லுங்க"

"அவங்க புல் அட்ரஸ் அண்ட் போன் நம்பர் வேணும்" கொஞ்சம் வந்து புக்குல பில் பண்ணி தரிங்களா ? அப்போ கேட்டனே நீங்க இன்னும் எழுதவே இல்ல ! நான் scanனுக்கு எழுதி குடுக்கனும்"

நான் சரி என்று நர்சுடன் சென்றேன்,

நான் குறித்து வைத்திருந்த பெயர் அட்ரஸ் போன் நம்பர் எல்லாம் எழுதினேன், பேனாவை நர்ஸிடம் கொடுத்து திரும்ப டுட்டி டாக்டரின் ரூமுக்கு வந்து கொண்டிருந்தேன்.

"முக்கியமா ஒருத்தருக்கு கொடுக்க அம்பதாயிரம் எடுத்துட்டு காலையில கிளம்பினாங்க, இப்போ காசு அவங்க பைல இல்ல, ரெண்டு கோல்ட் கிரிடிட் கார்ட் மிஸ்ஸிங், அவங்களுக்கு எதுவும் ஞாபகத்துக்கு இல்ல"
 
" எனக்கென்னமோ போலீசுக்கு போன் பண்றது நல்லதுன்னு நெனக்கிறேன் நீங்க என்ன சொல்றிங்க? "
அட்மிட் பண்ணறே அவர் பேரென்ன? சுரேஷா? அவர போலீசு வர வரைக்கும் எங்கயும் போகாம பாத்துக்கணும், போலீஸ் ஸ்டேஷன் நம்பர் இருக்கா"
 
ஷா டாக்டரிடம்  பேசிக்கொண்டிருந்ததை நான் ஜன்னலுக்கு வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்தேன்