Saturday, March 31, 2012

கமிசனர் ஆப்பிசுலர்ந்து போன்

வீட்டுக்கு வந்த விருந்தினர் மகள் ஹாலில் விளையாடிக்கொண்டு இருந்தாள். தூரத்து உறவு பல வருடமாய் பெங்களூரில் செட்டிலாகி இத்தனை வருடம் கழித்து வந்திருக்கிறார்கள், அவர் கிட்ட எத்தன வாடி சொன்னாலும் மண்டைய மண்டைய ஆட்டிட்டு ஆபீசுக்கு கேளம்பிடறார்.

வாசல் மணி அடித்தது... வாசலை பார்த்தேன் நிழலாடியது, கதவருகில் கவனித்தேன் " ஹோ அந்த பையனா ? "

நினைவுகள் சில மாதங்கள் பின்னோக்கி அசை போட்டன. தங்கையும் தங்கச்சி வீட்டுகாரும் வந்திருந்த போது இப்படித்தான் வந்தான், தங்கச்சி வீட்டுகாரர் தான் கதவை திறந்தார்

 " சார் ஊதுவத்தி வாங்கிக்குங்க சார் "

 "வேணாப்பா வீட்டுல இருக்குது "

 " சார் ரெண்டாவது வங்கிக்கிங்க சார் பத்து ரூபா தான், எக்ஸாம் பீஸ் கட்டனும் இன்னிக்கி கடைசி நாள் "

கதவை சாத்த போனவர் நின்றார் " ஹ்ம்ம் என்ன படிக்கிற ? "

 "பாலிடெக்னிக் சார் செகண்ட் இயர் "

 " என்ன சப்ஜெக்ட் ?" " டிப்ளமா இன் எலெக்ட்ரிகல் சார் "

 " ப்ரூப் வெச்சிருக்கியா ? "

அவன் ஐடி கார்டை காண்பித்தான் வாங்கி கொஞ்சநேரம் அதையே திருப்பி திருப்பி பார்த்துகொண்டிருந்தார்... விழுப்புரத்தில் மணியம்மை பாலிடெக்னிக். ஐடி ஒரிஜினல் தான் அவன் போட்டோவும் இருந்தது.

பிறகு " எவளோ பீஸ் கட்டணுமுன்னு சொன்ன ?"

" எட்டுநூத்தி அம்பதுருபா சார்... "

" அது சரி வீடு எங்க சொன்னே ? " விழுப்புரம் பக்கத்தில் ஏதோ கிராமம் பேர் சொன்னான்.

" அப்போ ஊதுவத்தி விக்க விழுப்புரமே போதுமே, எதுக்கு பாண்டிக்கு வந்த ?"

" தெரிஞ்ச ருல விக்க வெக்கமா இருக்கு சார்... " கொஞ்ச நேரம் யோசித்தவர்.. .இரு வரேன்,

சென்று பர்சை எடுத்து வந்தார் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகள் இருந்தன... 

" அடடே ஐநுருதனே இருக்கு... இரு"

 திரும்ப சென்று பையை நோன்டியவர்

 " இந்தா இதுல ஒரு முன்னூறு இருக்கு மொத்தம் எட்டுநூறு..... அம்பது ருபாய் எங்கியாவது போரட்டிக்க " என்றார்.

அவன் காலில் விழுந்தான் " அட எந்திரி பா படிக்கிற பசங்க கால்ல போய் விழுந்துகிட்டு போய் படி, எப்ப உதவி வேணுமுன்னாலும் சொல்லு " என்றார்

அவன் சென்றவுடன் அவர் திரும்பி பின்னல் நின்ற என்னிடம் " பாக்க நல்ல பையனா தெரியறான் ? கார்டு ஒரிஜினல் தான் ? பாவம் படிக்கிற பசங்க வூட்டுல என்ன கஷ்டமோ ? "


 " என்ன சரோ இன்னக்கி கடைக்கு போகணுமுன்னு சொன்னா, நானும் சரின்னுடேன் இப்போ பர்சு காலி " சிரித்தார்

 " விடுங்க பசங்க படிப்புக்கு முன்னால நம்ப கழ்டமெல்லாம் பெரிசில்ல. நானெல்லாம் சின்ன வயசுல படிக்க ரொம்ப கஷ்டபட்டேன், இவனுக்காவது ஊதுவத்தி விக்க தோனுச்சி, அப்ப எனக்கு அது கூட தோணலை" அவர் சுய புராணம் பாடிகிட்டே உள்ளே சென்றார்.

அதற்கு பிறகு சில தடவை வந்தான் கையில்அதே ஊதுவத்தி , டெர்ம் பீஸ்க்கு புக்கு வாங்க என்று, என்னால் முடிந்த பணம் கொடுத்திருக்கிறேன். அவனை பார்த்தவுடன் கையில் காசில்லை என்பது ஞபகத்தில் உரைத்தது, எப்படியும் வீட்டுக்காரர் போன் பண்ணுவார், ஏற்கனவே சொல்லியிருக்கேன் விருந்தாளி வருவது பற்றி... அவரிடம் இருக்கும் பார்த்துக்கலாம் (அவர் அரசு கருவூலத்தில் கணக்கர் வேலை, பெரிசாய் இல்லை என்றாலும் நிலையான சம்பளம், இப்போ ரெண்டு வாரமா கமிசனர் ஆபிசில் போஸ்டிங் ஏதோ கணக்கு வழக்கு பாக்கனுமாம், அது வீட்டுல இருந்து கொஞ்சம் அருகில் இருந்தது, போக வர வசதி என்று சந்தோஷ பட்டு கொண்டார்.

நினைவுகளில் இருந்து திரும்பி யோசித்து கொண்டே கதவை திறக்க போனேன், போன் மணி அடித்தது,

 " அம்மு அந்த போன எடு "

 கதவை திறந்து " வா தம்பி எப்படி படிக்கிற ? "

 " நல்லா படிக்கிறேங்க ஆனுவல் பீஸ் கட்டனும் "

 "உள்ள வாப்பா தண்ணி குடிக்கிறியா ? உக்காரு "

அவன் சோபாவில் அமர்ந்தான் அதற்குள் அம்மு வந்தாள்

" ஆண்டி கமிசனர் ஆப்பிசுலர்ந்து போன் "

அவன் சட்டென்று என்னை நிமிர்ந்து பார்த்தான்

குடும்மா என்று வாங்கினேன் " ஹலோ சொல்லுங்க ஆமா நான் சொல்லல... ஆமா வந்துருகாங்க நீங்க வொடனே பத்து நிமிசத்துல இங்க வரிங்களா " என்ற படி தண்ணீர் எடுக்க சமயலறைக்கு போனேன்.

 செம்பில் தண்ணீர் மொண்டு கொண்டே " அந்த பையன் வந்துருக்காங்க நான் கூட சொல்லுவனே "
 " ஆமா கைல காசு இல்ல, பீஸ் கட்டணுமாம் நீங்க கொஞ்சம் வீட்டுக்கும் வாங்களேன் " என்று பேசிக்கொண்டே ஹாலுக்கு வந்தேன்

சோபா காலியாய் இருந்தது... சுற்றிலும் பார்த்தேன் அவனை காணவில்லை... விறு விறு என வாசலுக்கு வந்தேன். அவன் தெருவில் இறங்கி நடந்து கொண்டிருந்தான்...

 தம்பி என்று கூப்பிட்டேன், வேகமாய் நடக்க ஆரம்பித்தான்

" தம்பி "

அவன் தெருவில் ஓட ஆரம்பித்தான் ....