Friday, November 6, 2009

ஒரு தலை முறை மெல்ல மாறுகிறது

ஏதேதோ யோசனையில் நேரமாகி விட்டதால் பெங்களுரு செல்ல பேருந்து நிலையம் வந்தேன், இரவு பத்தே முக்கால் வண்டி, இன்னும் நேரமிருந்ததால் காத்திருந்தேன்,

யோசனைகள் எங்கோ சென்றன, வாழ்க்கை போராட்டம், படிப்பு, வேலை, பல ஊர்கள் அனுபவங்கள் என மெதுவாக அசைபோட்டேன்

நான் படித்து முடித்து வேலை தேடிய நேரம், என் அப்பாவின் நண்பர் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். பேச்சுக்கிடையே அவர் வேலை செய்யும் கம்பனியில் கம்ப்யூடர் தெரிந்த பட்டதாரிக்கு தேவை இருப்பதாகவும் சொன்னார். நான் உடனே வேலை தேடுவதாகவும் கம்ப்யூடர் தெரியும் என்றும் சொன்னேன். அவர் தர்ம சங்கடமாய் சிரித்தார் பிறகு அவர் கம்பனியில் அவரின் சாதிக்கு மட்டுமே முதலிடம் என்றும் (அது ஒரு பிரபலமான சிமெண்டு கம்பனி), கம்ப்யூடர் பற்றி தெரியா விட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர் சாதியாய் இருப்பது முக்கியம் என்றும், வேண்டும் என்றால் கம்பனியே கம்ப்யூடரில் பயிற்சி கொடுக்கும் என்றும் சொன்னார், எனவே இப்போதைக்கு அவரின் உறவுகார பையனுக்கு சொல்லி இருப்பதாகவும் சொன்னார்.

அந்த வயதில் என்னால் திறமையை விட சாதியை தான் முக்கியமாய் பார்கிறார்கள் என்ற எதார்த்தத்தை ஒத்துகொள்ள முடிய வில்லை. நகர் புறத்தில் வளர்ந்து சினிமாவில் மட்டுமே பார்த்த காட்சிகளை நேரில் பார்க்க மனம் மறுத்தது.

ஏன்? நான் படிக்க கல்லூரியில் இடம் தேடி அலைந்த போது, கல்லுரியில் இடமும் மற்றும் வருட பணமும் நாங்களே கட்டுவோம் நீ எங்கள் மதத்தில் சேர்ந்தால் என்றவர்களை நான் அறிவேன்.

இப்படி சாதியம் மதமும் வேரோடி சிதைந்த சமூகத்தில் சாதி கேட்காமல் திறமையை பார்ப்பதில் இந்த தொழில் நுட்ப கம்பனிகளுக்கு தான் முதலிடம் என நினைக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு மருத்துவமும் பொறியியலும் பாமர மக்களுக்கு எட்டா படிப்புக்கள். ஒன்று அதீத புத்தியும் அல்லது அதீத பணமும் இருந்தால் மட்டுமே சாத்தியம். மற்றவர்கள் எல்லாம் என்ன படித்தாலும் குமாஸ்தா வேலை தான்.

எத்தனை கட்டுரைகள் இந்திய படிப்பு வெறும் குமாஸ்தாக்களை தான் உருவாக்கிக் கொண்டு இருக்கிறது என்று படித்திருக்கிறோம் மற்றும் அதை ஒத்துக்கொண்டும் இருக்கிறோம்,

அப்போது குமாஸ்தாக்களுக்கு என்ன சம்பளம்?, என்ன எதிர் காலம் ?

மூவாயிரம் ருபாய் சம்பளத்தில் காலத்தை முடித்தவர்கள் எத்தனை பேர் ?

இன்று தகவல் தொழில் நுட்பம் அதையும் விட்டு வைக்கவில்லை, ஐரோப்பாவில் ஒரு கணக்கர் செய்யும் வேலையை அதை விட பத்து மடங்கு குறைந்த சம்பளத்தில் ஒரு இந்தியர் செய்கிறார், அவர் சம்பளம் எடுத்தவுடன் பதினைந்து ஆயிரம், மூவாயிரம் சம்பளத்தில் இருந்து பதினைந்து ஆயிரம் சம்பளத்திற்கு நகர்ந்தவர்கள் நூறுபேரை எனக்கு தெரியும்.

யாரும் மேதாவி எழுத்தாளர்கள் எழுதுவது போல் குடித்துவிட்டு கூத்தடிக்க வில்லை(ஒரு பிரபல பத்திரிகையில் படித்தேன்), அவர்களின் குடும்ப தரத்தின் முன்னேற்றத்திற்கு அவர்கள் ஒரு முக்கிய தூணாகவே இருக்கிறார்கள், நடுத்தர மற்றும் கீழ் நிலை குடும்பங்கள் மெல்ல மாறுகின்றன.

மெதுவாய் ஒரு ஆரோக்யமான, நலமான குடும்ப சூழல்கள் உருவாகின்றன என்பதை கவனித்தீர்களா, கீழ் நடுத்தர வர்கங்கள் மெல்ல மேல் நடுத்தர வர்கங்களாய் மாறி குழ்ந்தைகளுக்கு நல்ல உணவும் நல்ல கல்வியும் கொடுக்க முடிகிறது என்பதை அறிவீர்களா?

தகவல் தொழில் நுட்ப துறையில் சம்பாதித்து யாரும் பெரிய பணக்காரர்கள் ஆகிவிட முடியாது
(வியாபாரிகளால் மட்டுமே முடியும் தற்போது உள்ள சூழ்நிலையில்)
ஆனால் ஒரு மேல் நடுத்தர வர்கங்களாய் மட்டுமே வாழ முடியும் என்பதாவது புரிகிறதா ?

ஒரு கிராமத்தில் படித்த ஒருவன் மருத்துவமோ பொறியியலோ படிக்க வசதி இல்லா விட்டாலும் ஒரு பி எஸ் சி படித்து சுலபமாய் தகவல் தொழில் நுட்ப துறையில் வேலை வாங்க முடிகிறது. அவன் ஒருவன் சம்பாத்தியத்தில் அவன் தங்கையோ தம்பியோ ஏன் அவன் குழந்தையோ நல்ல கல்வி பெற முடிகிறது என்கிற எதார்தமாவது புரிகிறதா ?

பெங்கலுரு பஸ் வந்ததும் ஏறி என் இருக்கையில் அமர்ந்தேன், அதில் ஏறிய பெரும்பாலனோர் வார விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்வோர்,

என் அருகில் ஒரு பெரியவர் வந்தார், சிறிது நேர மவுனதிர்க்கு பிறகு " தம்பி என் மகள் பக்கத்துக்கு சீட்டு, நீ கொஞ்சம் மாறி உக்காரிருயா " என்றார்

நான் சிரித்துக்கொண்டே " நான் மாறி வேறு ஒரு ஆண் உட்கார்ந்தால் என்ன செய்வீர்கள் " என்றேன்

விழித்தார்

நான் " வேறு பெண்களுடன் ஆண் உட்காரும் இடத்தில மாற சொல்லுங்கள், உங்கள் பெண் அங்கே உட்காரலாம் " என்றேன்

அவர் மெல்ல தேடிக்கொண்டே சென்றார். அவருக்கு அறுவது வயதிருக்கும், கிராமத்து முகம், ஏழ்மையை தெளிவாய் தெரிவிக்கும் உடை. அவர் மகளை தேடினேன். கருத்த கிராமத்து முகம் உயர்தர ஜீன்சும் பிரபலமான கம்பனியின் பையை முதுகில் மாட்டி, கையில் வண்ண அலை பேசியுடன் நின்றிருந்தாள்.

அப்போதுதான் ஒவ்வொருவரையும் கவனித்தேன், ஓரிரண்டு பேரை தவிர மற்றவர்கள் கீழ் நடுத்தரவர்க வீடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதை உணர முடிகிறது.

இதை இதை தான் நான் சொல்ல முயற்சித்தேன். பத்து இருவது வருடத்திற்கு முன் எத்தனை பேர் வயதுக்கு வந்த பெண்ணை நம்பி மொழி தெரியாத ஊரில் வேலைக்கு அனுப்பினார்கள்? யோசித்து பாருங்கள்! நம்பிக்கை கொடுத்தது எது ?

அந்த ஒரு பெண்ணின் முன்னேற்றம் நிச்சயம் அவள் வீட்டை பாதிக்கும், அவளின் தாய்க்கும் தந்தைக்கும் ஒரு சுகதரமான வீட்டை உருவாக்கி கொடுக்கும் என்பதை மறுக்க முடியுமா ? அல்லது அவளின் தம்பிக்கோ தங்கைக்கோ நல்ல கல்வியை பெற்று கொடுக்கும் என்பதை மறுக்க முடியுமா ?

வரப்புயர நீர் உயரும் நீருயர நெல்லுயரும் எனபது நம் ஆன்றோர் வாக்கில்லயா

ஒரு தலை முறை மெல்ல மாறுகிறது, இதை நல்ல படியாய் முன்னெடுத்து செல்வது நம் கடமை இல்லையா ?

குறிப்பு : கீழ் மற்றும் நாடு தர குடும்பங்களின் நிலை தகவல் தொழில் நுட்ப துறை வளர்ச்சியால் மெல்ல மாறுகிறது என்று பதிவு செய்ய விரும்புகிறேன், கடந்த ஐம்பது வருடங்களில் எந்த அரசோ அல்லது துறையோ இந்த மக்களின் வளர்ச்சிக்கு எந்த உண்மையான முயற்சியும் செய்ததாய் நினைவில்லை, வேலை இல்லா திண்டாட்டமே சமூகத்தின் பல்வேறு சீரழிவுகளுக்கும் இளைஞர்களின் வாழ்வு சீரழிவுகளுக்கும் காரணமாய் இருந்ததை மறுக்க முடியாது. இப்போது ஏதோ ஒரு நாட்டின் நிறுவனங்களின் வீழ்ச்சி, நட்டங்களை தவிர்க்க நம் நாட்டில் கடை திறக்க, அதை எப்படி நல்ல வழியில் பயன் படுத்தி வீட்டையும் நாட்டையும் நம் குழ்ந்தை களின் எதிர் காலத்தை நல் வழி படுத்த யோசிக்க வேண்டுமே தவிர, இவர்கள் வளருகிறார்கள் அவர்கள் வளருகிறார்கள் என்று குறை சொல்வது நாம் எவ்வளவு எண்ண ஆரோக்கியம் இல்லாத சூழலில் வாழ்கிறோம் என்பதையே காட்டுகிறது.

இன்ட்லி - தமிழ் செய்திகள், சினிமா, தொழிநுட்பம், இலங்கை, படைப்புகள்

2 comments:

மார்கண்டேயன் said...

உண்மையான, அனுபவபூர்வமான பகிர்வு, தகவல் தொழில்நுட்பம் இல்லையென்றால், 'வெந்தத தின்னுட்டு விதி வந்தாச் சாவோம்' என்கிற போக்கிலேயே வாழ்க்கை இருந்திருக்கும்,
தகவல் தொழில்நுட்பம் பல குடும்பங்களை உயர்த்தி நல்ல நில்லைக்கு இட்டு சென்றிருப்பது உண்மை, குறைகளும் உண்டு, மறுப்பதற்கில்லை.

Anonymous said...

திறமையான நீங்கள் ஏன் பதிவுகள் இடவதில்லை?